search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜா நிவாரண பொருட்கள்"

    தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட முதல்வர், புயலுக்கு பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். #GajaCyclone #EdappadiPalaniswami #GajaRelief
    சென்னை:

    தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்த அந்த புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. சுமார் 30 லட்சம் மரங்கள் சரிந்து விழுந்தன. குறிப்பாக மக்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை, வாழை மரங்கள் நாசமாகி விட்டன.

    கஜா புயலின் கோரத் தாண்டவத்துக்கு 46 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.  

    இந்நிலையில்  புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட முடிவு செய்தார்.

    இதற்காக இன்று காலை அவர் சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி சென்றார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் சென்றனர்.



    திருச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பிறகு அவர்கள் ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர். அங்குள்ள ஆயுதப்படை மைதானத்தில் இறங்கிய அவர்கள் கார் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர்.

    மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதிகளில் கஜா புயலால் இடிந்த வீடுகள், மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் கஜா புயலால் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி உதவியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். வீடு மற்றும் உடமைகளை இழந்த 36 பேருக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். #GajaCyclone #EdappadiPalaniswami #GajaRelief  
    ×